ஐ.எஸ்.ஐ. எஸ் தோற்றம்


1924 இல் துருக்கியில் துரோகத் தனமாக உஸ்மானிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. அன்றிலிருந்து மீண்டும் கிலாபத்தை உருவாக்க வேண்டும் என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் முஸ்லிம் உலகில் பரவலாக இருந்தது. இந்த சிந்தனையால் பலரும் ஈர்க்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் தான் உஸாமா பின் லாதீன் ஆவார். அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த இவர். ஆப்கானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு எதிராகக் களம் இறங்கினார். இவர் அரபுப் போராளிகளை மையமாகக் கொண்டு 1988 இல் 'அல் காயிதா அல் ஜிஹாத்” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அரபு நாடுகளிலும் இந்த அமைப்பு செல்வாக்குப் பெற்றது.


ஈராக்கில் இயங்கி வந்த 'ஜமாஅதுத் தவ்ஹீத் வல் ஜிஹாத்” அமைப்பின் தலைவர் 'அபூ முஸ்அப் அஸ் ஸர்காவி’ அல்காயிதாவின் ஈராக் தலைவரானார். அரபு நாடுகளிலும், ஈராக்கிலும் அமெரிக்காவின் இருப்புக்கு எதிராக இவர்கள் 2003 களில் தீவிரமாகப் போராடி வந்தார்கள்.


ஸர்காவியின் தலைமையில் ஈராக்கில் அல் காயிதா:

அல் காயிதா ஈராக்கில் பல பெயர்களில் செயற்பட்டுள்ளது. 'அல் ஜிஹாத் பீ பிலாதிர் ராபிதீன்’ என்ற பெயரிலும் பின்னர் 'மஜ்லிஸு ஸுரா அல் முஜாஹிதீன்’ என்ற பெயரிலும் இயங்கியது. 2006 இல் ஸர்காவிக்குப் பின்னர் அபூ ஹம்ஸா அல் முஹாஜிர் இதன் தலைவரானார். இவரது காலத்தில் 'தவ்லா அல் இஸ்லாமிய்யா பில் இராக்” என்ற ஈராக்கிய இஸ்லாமிய அரசுக்கு அபூ உமர் அல் பாக்தாதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் அல் காயிதாவும் இணைந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ். அல் காயிதாவின் கீழ் இயங்கத் தொடங்கியது. 2007 டிசம்பரில் அபூ உமர் அல் பாக்தாதிக்கு பைஅத் (உறுதிப் பிரமாணம்) செய்யுமாறு உஸாமா வேண்டுகோள் விடுத்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் அதாவது, ஈராக் இஸ்லாமிய அரசு அல்காயிதாவின் கீழ் செயற்பட்டது என்பது முக்கிய செய்தியாகும். 2010 அபூ உமர் அல் பாக்தாதி கொல்லப்பட்ட பின்னர் அபூபக்கர் அல் பாக்தாதி தலைவரானார்.

அவருக்கு பைஅத் அளிக்கப்பட்டது. இதன் பின் அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. சிரியாவிலும் அத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. சிரியா, ஷியா அரசின் கொடூரத்திற்கு எதிராகப் போராட வருமாறு அல் காயிதாவின் தலைவர் அய்மன் ஜவாஹிரி அழைப்பு விடுத்தார்.

அபூ முஹம்மத் அல் ஜவ்லானி சிரியாவுக்குப் போராடச் சென்றார். போரில் தொடர்ச்சியான வெற்றி கிடைத்தது. இவர் ஜப்ஹதுன் நுஸ்ராவின் தலைவராவார். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி செப்டம்பர் 4, 2013 இல் 'பஸ்ஸிரில் முஃமினீன்” எனும் தலைப்பில் உரையாற்றும் போது ஜப்ஹதுன் நுஸ்ராவும் தமக்குக் கீழே உள்ள அமைப்பு என்றும் சிரியாவில் செயற்பட்ட ஜப்ஹதுன் நுஸ்ராவையும் இணைத்து ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை அல் காயிதாவும் ஏற்கவில்லை. ஜப்ஹதுந் நுஸ்ராவும் ஏற்கவில்லை. இதனால் முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டுக்கு மத்தியில் அபூபக்கர் அல் பாக்தாதி ஜூன் 29, 2014 ஆம் திகதி இஸ்லாமிய கிலாபாவை அறிவித்தார்.
அல்கைதாவின் கீழிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அந்த பைஅத்தை முறித்த அதே வேளை தமக்குக் கீழே வர மறுத்த ஜப்ஹதுந் நுஸ்ராவுக்கு எதிராகப் போராடியது. இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வரலாற்றைப் பார்க்கும் போது தோற்றமே துரோகத்திலும் அடக்கியாளும் மனப்பான்மையிலும் உருவாகி யிருப்பதை அறியலாம். ஈராக்கிய இஸ்லாமிய ஆட்சி என்றிருந்து ஈராக், சிரியா இஸ்லாமிய ஆட்சியாக மாறி திடீரென உலகலாவிய இஸ்லாமிய கிலாபாவாக ஐ.எஸ்.ஐ.எஸ் மாற்றமடைந்துள்ளது கவனிக்கத் தக்கதாகும். இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உண்மையான இஸ்லாமிய கிலாபத்தா அல்லது கவாரிஜ்களின் போக்கில் செயற்படும் வழிகெட்ட ஒரு பிரிவா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

(வளரும்)


Who's Online

We have 54 guests and no members online