ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு போராட்டத்தின் மூலம் ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

அந்த அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, ஜூன் 29, 2014 ஆம் திகதி இஸ்லாமிய கிலாபாவை நிறுவியுள்ளதாக அறிவித்தார். உலகளாவிய இஸ்லாமிய கிலாபாவாக ஐ.எஸ்.ஐ.எஸ் மாற்றமடைந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.


இஸ்லாத்தின் பார்வையில் அபூபக்கர் பாக்தாதியின் அறிவிப்பு ஏற்புடையதா என்பதை ஆய்வோம். வலுக்கட்டாயமாக ஆக்கிர மிக்கப்பட்ட அந்தப் பகுதியில் இருப்பவர்களின் சரியான அங்கீகாரம் இல்லாமல் அந்தப் பகுதியை மையமாக வைத்து அந்த அமைப்பு கிலாபத்தை எப்படி அறிவிக்க முடியும்?


உமர் (ரழி) அவர்கள் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து அதில் ஒருவரை கலீபாவாகத் தேர்ந்தெடுக்குமாறு கூறிய போது கூட, அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் வீடு வீடாகச் சென்று விருப்பம் கேட்டார்கள் எனும் போது மக்களின் மீது ஆட்சியைத் திணிக்க முடியுமா?. இவர்கள் தம் வசமுள்ள பகுதிகளை ஆள உரிமை கோரினாலும் பரவாயில்லை. முழு உலகையும் ஆள உரிமை வேண்டுகின்றனர். தமக்கு முரண்பட்ட ஆட்சியாளர்களை தாகூத்கள் (இறைநெறிக்கு எதிராக வரம்பு மீறியவர்கள்) என்றும் முர்தத்துகள் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்) என்றும் கூறுகின்றனர். இது கிலாபத் வழியா? கவாரிஜ் வழியா என்று சிந்தித்துப் பாருங்கள்.


ஒரு சோதனை:

கிலாபா பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள். 'உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தோருக்கு இவர்களுக்கு முன்னுள்ளோர்களை பூமியில் அதிபதி களாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப் படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாம் பாவிகள்.”(24:55)


இஸ்லாமிய கிலாபத் வந்தால் தமது பகுதியின் கட்டுப்பாட்டுப் பகுதியின் முழு அதிகாரம் வரும். தமது மார்க்கத்தைப் பூரணமாகக் கடைப்பிடிக்கும் வாய்ப்பு வரும். அச்சத்திற்குப் பின் பாதுகாப்பான சூழல் வரும்.இவர்கள் கிலாபா அறிவித்த பகுதியான ‘'ஹலப்” அலப்போவில் தான் சென்ற ஆண்டு அதிக மனித உயிர்கள் பலிபோயுள்ளன. அதிகமான மக்கள் அகதிகளாயுள்ளனர். அங்கு அச்சம் அதிகரித்துள்ளது. அமைதி குழம் பியுள்ளது. அழிவுகள் கூடியுள்ளன. மார்க் கத்தைக் கடைப்பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அனைத்தும் நடந்தேறுகின்றன. கிலாபத் என்பது இதுதானா? இப்படியும் ஒரு கிலாபத் தேவைதானா?


ஒரு கிலாபத் வழங்க வேண்டிய எதையும் இவர்கள் தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்குக் கூட வழங்காமல் முழு உலகமும் கலீபாவுக்குரிய முழு அந்தஸ்தையும் அதி காரத்தை யும் எமக்குத் தர வேண்டும். இல்லை யென் றால் நீங்கள் இஸ்லாமிய கிலாபத்தின் எதிரிகள், வழிகேடர்கள், முர்தத்துகள்... என்று கூறுவது எவ்வளவு அநியாயமானது!
இமாம் ஒரு கேடயம்


"நிச்சயமாக இமாம் என்பவர் ஒரு கேடயமானவர் என நபி(சல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புஹாரி)


கேடயம் என்பது பாதுகாப்பளிக்கும். இந்த இமாமால் பாதுகாப்பு இல்லை எனும் போது, மாறாக பாதிப்புதான் உண்டு எனும் போது இவர் எப்படி கிலாபத்துக்குரிய இமாமாக இருப்பார்?


கிலாபத் செய்ய வேண்டிய எந்தப் பணியையும் இவர்கள் செய்யவில்லை. பைஅத் செய்யாதவர்களை அழித்து வருகின்றனர். கடந்த கால கவாரிஜ்கள் போன்று ஆட்சியாளர்களைக் காபிர்கள், தாக்கூத்கள் என எதிர்த்து வருகின்றனர். இப்படியிருக்கும் போது இது கிலாபத் ஆகுமா?


அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்: நபி(சல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார்.. (தொழுது முடித்ததும்) நபி(சல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(சல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவில்லை என்று இறைத்தூதர் (சல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(சல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை” என்று இறைத்தூதர்(சல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே, எனக்குக் கற்றுத் தாருங்கள்!” என்று கேட்டார். நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூஃ செய்வீராக! பின்னர் ருகூஃவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று இறைத்தூதர் (சல்) அவர்கள் கூறினார்கள்.” (புஹாரி: 757)


முறையாகத் தொழாதவரை நீ தொழவில்லை என்றே நபி(சல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஐஎஸ்ஐஎஸ் முறையாக கிலாபா செய்யவில்லை என்றால் அது இஸ்லாமிய கிலாபத் இல்லையென்பதே இஸ்லாத்தின் தீர்வாகும்.


(தொடரும்)


Who's Online

We have 54 guests and no members online