சென்னையில் உள்ள பிரஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியில், கடந்த பிப்ரவரி முதல் வாரம் கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது.

 இக்கருத்தரங்கில் கல்வி நிறுவனங்கள், மற்றும் அழைப்பு மையங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், உலமாக்கள், பெண்கள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

 இதில் அரபு மொழி அறிவை வளர்ப்பதற்கான வழிகாட்டல், அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை விளக்கம், கல்வி வளர்ச்சிக்கான திட்டமிடல்-மேலாண்மை பற்றிய விரிவான தகவல்கள் பகிரப்பட்டது.

இக்கருத்தரங்கில், இஸ்லாத்தில் வரம்புமீறுதல் என்ற தலைப்பில் அம்மாப்பட்டினம் அன்னை கதீஜா கலைக்கல்லூரி  பேராசிரியர். எம்.அப்துர்ரஹ்மான் மன்பஈ,  மார்க்க தீர்ப்பளிப்பதின் வரையறைகளும் ஒழுக்கங்களும் என்கின்ற தலைப்பில் ஷைய்க்.அனீஸுர் ரஹ்மான் மதனி,   நபிமொழிகளும் அஹ்லுஸ்ஸுன்னாவும் என்கின்ற தலைப்பில் ஜாக் அமைப்பின் தலைவர் ஷைய்க்.எஸ்.கமாலுத்தீன் மதனி ஆகியோர் கருத்துரையாற்றினர். 

திருக்குர்ஆன், ஸுன்னாவைப் புரிவதில் அரபு மொழியின் பங்கு என்கின்ற தலைப்பில் பிரஸ்டன் கல்லூரியின் பேராசிரியர் ஷைய்க்.அமீன் அஹ்மது மதனி ,  மொழியாக்க கல்வியின் அவசியம் குறித்து சென்னை பல்கலை கழகத்தின் அரபி துறைத் தலைவர் பேராசிரியர். முனைவர்.ஏ,ஜாஹிர் ஹுசைன் ஆகியோர்  விரிவுரை நிகழ்த்தினர்.

இஸ்லாம் கூறும் திட்டமிடலும் சீரிய நிர்வாகமும் என்கின்ற தலைப்பில் இக்கல்லூரியின் இஸ்லாமிய அறிவியல் (ஆங்கிலம்) துறைத்தலைவர் முனைவர்.முஹம்மது சுலைமான் உமரி  உரையாற்றினார்.

அரபு மொழியை பயிற்றுவிப்பதற்கான யுக்திகளை காணொலி காட்சிகளுடன் ஷைய்க். முனைவர். ஆர்.கே.நூர் முஹம்மது மதனி  விளக்கினார். முஸ்லிம் கல்வி நிறுவன வளர்ச்சிக்கான வழிகள் என்கின்ற தலைப்பில் இக்கல்லூரியின் தலைவரும் யூனிடி பப்ளிக் ஸ்கூல் நிறுவனரும் கல்வியாளருமான அஹ்மது மீரான் உரையாற்றினார். யூனிட்டி பப்ளிக் பள்ளி உட்பட பல பள்ளிகளை நிர்வாகிக்கும் மீரான் அவர்கள் தனது உரையில்,  பள்ளிக்கூடங்களை நிறுவி நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை தன்னுள் பல ஆண்டுகளுக்கு முன்பு விதைத்தவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களான பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், ஹைதர் அலியும் தான் என்று குறிப்பிட்டார். ஒரு பள்ளிக்கூடம் வெற்றி பெற தரமான நிர்வாகமும் தரமான ஆசிரியர்களும் தரமான பெற்றோர்களும் தேவை என்று குறிப்பிட்டார்.

 கல்வி நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம்.எச்.ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘உலகமயமாக்கல் தாரளமயமாக்கல் நிலைப்பாட்டை 1991 முதல் மத்திய அரசு தனது கொள்கையாக ஏற்றுக் கொண்ட பிறகு கல்வி முற்றிலும் வணிகமயமாகியுள்ளது. மக்கள் நலன் விரும்பும் அரசுக்கு இது சரியல்ல என்று குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்கி வந்ததினால் தான் சிறுபான்மை சமூகத்தினர் உள்ளிடட பல்வேறு சமூகத்தினர் சமுதாய சேவை நோக்கில் கல்வி நிறுவனங்களை தொடங்க முடிந்தது. இந்நிறுவனங்களில் குறைந்த கட்டணத்தில் படித்து நாடு சிறந்த அறிஞர்களை கண்டது’ என்று குறிப்பிட்டார்.

முடிவில் இக்கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ஜிப்ரி காஸீம்  நன்றி கூறினார். முன்னதாக இக்கல்லூரியின் இளங்களை இஸ்லாமிய அறிவியல் ((தமிழ்) துறையின் தலைவரும் இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் மவ்லவி முஜீபுர்ரஹ்மான் உமரி அனைவரையும் வரவேற்றார்.

பிரஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரி பல்கலைகழக அங்கீகாரத்துடன் பிஏ இஸ்லாமிக் ஸ்டெடிஸ் (இஸ்லாமிய அறிவியல்) மூன்று வருட பட்டப்படிப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றது. இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டும் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தூரக் கல்வி வழியாகவும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.

 -அக்பர் சுல்தான்


Who's Online

We have 23 guests and no members online