நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையில் மத்திய அரசு முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலையை ஆய்வு செய்ய அமைத்த உயர் நிலைக் குழுவின் அறிக்கையும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமும் தமது அறிக்கைகளை சமர்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

இந்த இரு அறிக்கைகளும் அறிவுறுத்தியுள்ள பரிந்துரை களின் நிலை என்னவென்பது குறித்து சென்னை காமராசர் அரங்கில் மார்ச் 21 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் குணங்குடி ஆர்.எம். அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கருத்தரங்கில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உ வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி. மகேந்திரன் ஆகியோர் பங்கு கொண்டு கருத்துரையாற்றினர். இக்கருத்தரங்கையொட்டி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995 முதல் நடத்திய போராட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தனது உரையில் குறிப்பிட்டதாவது. பத்தாண்டுகள் கடந்த பிறகும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக நிறை வேற்றப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது.
சச்சார் குழு தனது அறிக்கையில் முஸ்லிம்களின் நிலை செட்யூல்ட் இன மக்களை விட மோசமானதாக இருப்பதாக குறிப்பிட்டது. இன்றைய நிலையில் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமானதாக உள்ளது. எடுத்துக்காட்டாக 2005-ல் இந்திய காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.63 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 6.27 விழுக்காடாக குறைந்துள்ளது.முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்திருப்பதை சுட்டிக் காட்டிய சச்சார் குழு, தொகுதி மறுசீரமைப்புகள் செய்ய வேண்டுமென அளித்த பரிந்துரை நிறைவேற்றப்படவில்லை.


சிறுபான்மையினருக்கான வாய்ப்புகள் சரியான முறையில் அவர்களை அடைய செய்வதற்காக சம வாய்ப்பு ஆணையம்  (Equal Opportunity Commission) அமைக்கப்பட வேண்டுமென்று சச்சார் குழு பரிந்துரைத்தது. இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை. இந்த ஆணையத்தை மதசார்பற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மதவழி சிறுபான்மையினருக்கு பரிந்துரைத்த இடஒதுக்கீடும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை. சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் உறுதியான அழுத்தம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."


இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசினார்;

------------------------------------------------

இந்தியாவில் பாசிசத்தின் கரங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் சத்தியம் நவிழ்கின்ற நாவுகளைக் கூர்மைப்படுத்தும் விதமாய் பத்தாண்டுகள் கடந்தும் கிடப்பில் போடப்பட்ட சச்சார், மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைகளை சமூகத்திற்கு மீண்டும் நினைவுபடுத்தவும், அரசுகளின் செவிகளுக்கு கொண்டு செல்லவும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கோரிக்கை கருத்தரங்கம் கடந்த மார்ச் 21ஆம் நாளன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.


வாரத்தின் வேலைநாட்களில் ஒன்றான செவ்வாய்க்கிழமை என்ற போதிலும் தியாகம் நம் சமுதாயத்தின் அடையாளம் என்பதைப் பறைசாற்றும் வகையில் இரண்டு மணியிலிருந்தே மக்கள் அரங்கத்திற்கு வரத் துவங்கியிருந்தார்கள். கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக, இழந்த உரிமையை மீட்க இருக்கின்ற உரிமையைப் காக்க என்ற சீரிய முழக்கத்தோடு 1995ஆம் ஆண்டு துவங்கிய தமுமுகவின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டக் களங்களை விளக்கும் விதத்தில் புகைப்படக் கண்காட்சி மலரும் நினைவுகளை அருமையாக பதிவுச் செய்திருந்தது.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தமுமுகவின் மாநில துணைத் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ பேசும்போது, காலம் மாறினாலும் சமூகத்தின் அவலம் அகலவில்லை, தொடர்ந்து சமூக, கல்வித் தளங்களில் புறந்தள்ளப்படுகின்றோம், நம் சதவிகிதத்திற்கு ஏற்றவாறு நம் பங்கு அதிகார தளங்களில் பிரதிபலிக்கவில்லை என்ற உண்மையை விளக்கினார். அதைத்தொடர்ந்து தமுமுக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, தமுமுக துவங்கிய 1995ஆம் ஆண்டிலிருந்து செய்த தியாகத்தையும், தடைகளை உடைத்து படைத்த சாதனைகளையும் முழங்கினார்.
தோள் கொடுக்க தயாராய் இருக்கும் தோழர்கள்


கருத் தரங்கில் இந்தியப் பொதுவுடைமை கட்சியின் சார்பாக தோழர் சி.மகேந்திரன் பேசியதாவது; இந்திய நாடு எப்போதும் பார்த்திடாத நெருக் கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோடியின் அரியணை ஏற்றலுக் குப் பிறகு சிறுபான்மை மக்களின் உணர்வுகள் நகைப்புக்குள்ளாகி இருப்பது ஜனநாயகத்தின் மாண்புகளைப் சிதைக்கின்ற செயலாகும்.


1992ஆம் ஆண்டு பாபர் பள்ளிவாசல் இடிப்புக்குப் பிறகு முஸ்லம்களின் உரிமைக் குரலாய், எல்லா மக்களுக்காகவும் போராடுகின்ற ஒரு பேரியக்கம் தான் தமுமுக. இவ்வியக்கத்தின் பணிகள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே நீதியரசர் கோபால்சிங் தலைமையில் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலையைக் கண்டறிய ஆணையம் அமையப்பெற்றது. அது தன்னுடைய அறிக்கையை 1983ல் சமர்ப்பித்தது. அப்போதே முஸ்லிம்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற உண்மையை வெளிச்சப்படுத்தி இருந்தது.


அதன்பிறகு 2005ல் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவும் இதே கருத்தைக் கூறியிருப்பது முஸ்லிம் மக்களின் நிலை மாறாமல் இருப்பதையே காட்டுகிறது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தோளோடு தோள் நின்று போராடும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். என்றார்.


முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) சார்பாக அக்கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினரும், பெண்ணுரிமை ஆர்வலருமான உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது; பெண்களுக்கு அரசியலில் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வரங்கில் மூன்றில் ஒரு பங்கினராக எந்த சலிப்பும் காட்டாமல் சகோதரிகள் கலந்திருப்பது வரவேற்கத்தக்கது. மிக முக்கியமான கால சூழ்நிலையில் இக்கருத்தரங்கத்தை நடத்துவது மிகவும் பொருத்தமானது.


இந்நாட்டின் விடுதலைக்கும், செழுமைக்கும் அனைத்தையும் தியாகம் செய்த சமூகம் இன்று தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளப் போராடுவது தேசத்தின் அவலநிலையைக் காட்டுகிறது.. ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு அந்தந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு மாநில அளவில் இடஒதுக்கீடு நல்க வழிவகை செய்ய வேண்டும். அதன் முன்னோடியாக கேரள அரசு முஸ்லிம்களுக்கு 12 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருப்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். பாசிசம் விழ, சனநாயகம் மலர ஒன்றுபட்டு போராடுவோம்.


இந்திய அளவில் கைகோர்க்க வேண்டும்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் பேசும்போது, நீதிபதிகள் ராஜிந்திர சச்சாரும், ரங்கநாத மிஸ்ராவும் மார்க்கத்தால் இஸ்லாமியர்கள் இல்லை, ஆனால் இந்திய சனநாயக, மதச்சார்பற்ற கோட்பாடுகளின் மீது நம்பிக்கையுள்ளவர்கள். தங்களின் கடமைகளை சரியாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.


மிக முக்கியமாக சச்சார் தன் அறிக்கையில் நம் தேசத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நிலையை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.


இன்று மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். அரசு முஸ்லிம்களே இல்லாத நாட்டை உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் சச்சார் பரிந்துரையை நடைமுறைப்படுத்த முற்படு வார்களா என்பது ஐயம்தான்.


நம் கையில் ஆட்சி அதிகாரமில்லாத வரைக்கும் உரிமையைப் பெறுவது சாத்தியமற்றது. மதச்சார்பற்ற சக்திகள் போராட்டக் களத்தில் மட்டும் ஒன்றுசேராமல் தேர்தல் களத்திலும் வலுவான கூட்டணி அமைப்பதுதான் நம் உரிமைகளைப் பெற உதவும்.

செவி மடுக்குமா செவிட்டு செவிகள்?

இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டார் அல்போன்ஸ் கருத்துரை வழங்கினார். அவர் பேசும்போது, நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது இரண்டாம் பட்சம், குறைந்த அளவு செவிமடுக்கவாவது வேண்டும். ஆனால் இந்த அரசு அதைச் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, இருக்கின்ற உரிமையையாவது பங்கம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். மதச்சார்பற்ற சீலரான நேரு அவர்கள் சிறுபான்மை மக்களைப் பார்த்த விதம் வேறு, தீவிர இந்துத்துவவாதியான மோடியின் சிறுபான்மை மக்களின் பால் உள்ள போக்கு வேறு. நேருவும் மோடியும் இருவேறு தன்மைகள் கொண்ட ஆளுமைகள். வடக்கில் வெற்றிகளைத் தொடர்ந்து தென்னகத்தின் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸின் பார்வை கூர்மையாகியுள்ளது.. இந்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.


இந்திய தேசியத்தின் எதிரி பாஜக

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்தியாவின் உண்மையான எதிரி பாஜக தான். நாட்டு மக்களை அச்சுறுத்தி அழிக்கும் சக்தியாக இன்று இது மாறியிருக்கிறது. முதலில் யார் சிறுபான்மை என்பது நமக்கு தெளிவு வேண்டும். எண்ணிக்கையில் அதிக அளவில் இருந்தும் ஆட்சி அதிகார மன்றங்களில் குறைந்த அளவிலான பிரதிநிதிகள் உள்ள சமூகம் தான் சிறுபான்மையினர்.


இன்று 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள குறிப்பிட்ட சமூகம் அனைத்து மட்டங் களிலும் ஆக்கிரமித்து தங் களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு சமூக நீதிக்கு எதிராகப் பகிரங்க போர்த்தொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தான் முஸ்லிம்களின் நாட்டுப் பற்றின் மீது அவதூறு பரப்புகிறார்கள். இந்நாட்டின் மைந்தர்கள் முஸ்லிம்கள். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவனாகவோ, நாடா ராகவோ, கோணாராகவோ, பறையராகவோ இருந்தவர்கள் தான். இவர்களின் முன்னோர்கள் பிற்போக்குத்தனம், தீண்டாமைப் போன்ற இருளிலிருந்து விடுபட்டு வெளிச்சத்திற்கு மாறியவர்கள். இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், நாட்டால் இந்தியர்கள், மார்க்கத்தால் இஸ்லாமியர்கள். முஸ்லிம்கள் ஒரு அணியில் திரண்டாலே பாதைகள் தானாக உண்டாகும் என்றார்.

 


Who's Online

We have 52 guests and no members online