கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன் I பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல் (Video)

கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன் I பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல் (Video) கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன் I பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல் (Video)
Watch the video

இந்திய அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தலைப்புச் செய்தியாய் திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி தாங்க இயலாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தாக்கிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, சிகரங்களை அளந்த சிம்புப் பறவையான கலைஞர் அவர்கள், தமிழகத்தின் சமகால வரலாறாய் நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்.


தொண்டால் பொழுதைந்து, தொண்ணூற்றைந்து அகவையைத் தொட்டுள்ள கலைஞரின் வாழ்ந்த காலம் மட்டுமல்ல, வாழ்ந்த காலத்தில் அவர் தொட்டுள்ள சிகரங்கள் வியப்புக்குரியவை.


‘தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்’ என்று அவர் பராசக்தியில் எழுதியது வெறும் வசனமல்ல, அவரது நெடும் பயணத்தில் கண்ட நிதர்சனம் என்பதை, அசைபோடும் நினைவுகளே அழுத்தமாகச் சொல்கின்றன.


பள்ளிப் படிப்பைத் தாண்டாத கலைஞர் கருணாநிதி, தமிழின் ஆறு இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். எட்டு கவிதை நூல்கள், 10 சமூக நாவல்கள், எட்டு சரித்திர நாவல்கள், உடன்பிறப்புகளுக்கு ஏழாயிரம் கடிதங்கள் என அன்றாடம் முரசொலிக்குப் படைப்புகள் என முழுநேர எழுத்தாளரால் எட்ட முடியாத சிகரங்களை தனது பரபரப்பான அரசியல் பணிகளுக்கிடையே தொட்டிருக்கிறார்.


அவரது பேச்சாற்றல் மிகவும் அபாரமானது. வெல்லுஞ்சொற்களின் விளைநிலமாக விளங்கிய வித்தகர் ஓர் அவைக்குள் அவர் நுழையும் போதே உற்சாகம் பரவும். வெளியேறும் போது இதயங்கள் அவர் வசமாகும் என்றும் அளவுக்கு மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராக 1969 முதல் 2018 வரை அரைநூற்றாண்டு காலம் அசைக்க முடியாத தலைவராக இருந்துள்ளார்.


ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து பெரியாரின் இலட்சியங்களையும், அண்ணாவின் கொள்கைகளையும் திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளை ஆட்சியில் பிரதிபலித்து, தமிழகத்தில் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்தார்.


சிங்காரச் சென்னையின் சிற்பியாகத் திகழ்ந்து தலைநகர் சென்னையைத் தொழில் புரட்சியில் முன்னணியில் நிறுத்தியவர்.


2000ல் இணையத் தொழில்நுட்பங்களில் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ வழிவகுத்தார்.


ஆளுமைத் திறனும், ஆழமான அறிவும், நகைச்சுவைப் பண்பும் நயத்தக்க நாகரீகமும் அவரது சிறப்புகள். இவையாவும் முதன்மையானது சமூகநீதிக் கொள்கையின் மீது அவர் கொண்டிருந்த மாறாதப் பற்று.
சமூகநீதி என்றால் இடஒதுக்கீடு என்ற அளவில் முடிந்துபோய் விடக்கூடியது அல்ல, எல்லா நிலையிலும் எவரும் சமத்துவம் என்ற நிலையை எய்துவதே என்ற புரிதலை அவர் கொண்டிருந்தார்.


அடிமையாக இருக்கும் ஒருவன் தனக்குக் கீழ் ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமையைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே இல்லை என்பது அவரது சொல்லோவியங்களில் ஒன்று.
தமிழக முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையைத் தமுமுக மிக வலிமையாக முன்னெடுத்தது. கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் அதை நிறைவேற்றினார். சிறுபான்மை முஸ்லிம்களின் நீண்ட கால கனவை நனவாக்கினார்.


அதற்காக தமுமுக சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான நன்றி அறிவிப்பு மாநாட்டில் சிறப்புரையாற்றிய கலைஞர், தமுமுக, அன்னை இல்லம் போல், கருணை இல்லம் போல் ஆதரவற்ற மக்களுக்குச் சேவை ஆற்றுவதாக மனமாரப் பாராட்டி, தமுமுகவின் அவசர மருத்துவ ஊர்தித் தொண்டையும் மிகவும் வியந்து, தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு பெரிய அவசர உதவி ஊர்தியை வாங்கித் தந்தார் என்பது நெகிழ்வான நினைவுக்குரியது. நன்றி அறிவிப்பு மாநாட்டில் உரையாற்றிய கலைஞர் அவர்கள் நன்றிக்கு நன்றி சொல்கிறேன் என்று சொல்லி விட்டு இந்த நன்றி எனக்கு மட்டுமல்ல நீதிக் கட்சியிலிருந்து தொடங்கி பெரியாருக்கும் அண்ணாவிற்கு உரித்தானது என்று சொல்லி திராவிட இயக்கக் கோட்பாடுகளை நிறைவேற்றுவது தான் தனது இலட்சியம் என்று குறிப்பிட்டார்.


முஸ்லிம் மகளிரின் மேம்பாட்டுக்காக Muslim Women Welfare Aid Society அரசின் முஸ்லிம் பெண்கள் நல்வாழ்வு உதவி சங்கத்தின் சார்பில் இணை மானியம் (Matching Grant) வழங்கும் முறை சென்னையளவில் நடைமுறையில் இருந்து வந்தது. அதிகாரிகள் இணை மானியத்திற்கு 5 லட்ச ரூபாயை உச்சவரம்பாக நிர்ணயித்து விட்டனர். இதுகுறித்து தமுமுக சார்பில் அன்றைய முதல்வர் கலைஞரிடம் முறையிட்ட போது, நமது முன்னிலையிலேயே தொடர்புடைய அதிகாரிகளை அழைத்த கலைஞர், ‘மேட்சிங் கிராண்ட்’ என்பதற்கு உங்களுக்குப் பொருள் தெரியாதா? அவர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு இணையான தொகை வழங்குவதுதான் ‘மேட்சிங் கிராண்ட்’. அதே முறையில் இத்திட்டம் தொடர வேண்டும், உச்சவரம்பு எதுவும் விதிக்கக்கூடாது என்று கலைஞர் உத்தரவிட்ட கலைஞர், சென்னையளவில் இயங்கிவந்த இத்திட்டத்தைத் தமிழக அளவில் விரிவுபடுத்தி இச்சமுதாயத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


1998ல் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எங்கள் தமுமுக இயக்கத்தைத் தடை செய்வதற்கு, கோப்புகளைத் தயார் செய்து அவர் முன்பு வைத்தபோது, அவசர நிலையைத் துணிச்சலுடன் எதிர்த்த பாரம்பரியம் மிக்க தமிழக முதலமைச்சர் கலைஞர் எனது காலத்தில் ஒரு ஜனநாயக இயக்கத்தை ஒருபோதும் தடை செய்ய மாட்டேன் என்று கூறிய இமாலய உயர ஜனநாயக பண்பாளர்.


உளவுத் துறை தலைவர், பல்கலைக்கழக துணை வேந்தர் உட்படப் பலர் உயர் பதவிகளில் தமிழக முஸ்லிம்கள் கலைஞர் அவர்களது ஆட்சிக் காலத்தில் தான் அமர்த்தப்பட்டார்கள்.


தான் சிறுவயதிலேயே பிறைக்கொடி ஏந்தி திருவாரூரில் முஸ்லிம்களின் ஊர்வலத்தில் பங்கேற்றதையும், பேராசிரியர் அன்பழகனை திருவாரூர் முஸ்லிம்களின் விழாவில் தான் முதன்முறையாகச் சந்தித்ததையும் கலைஞர் தனது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.


கட்சிக்கொடி உறவைக் கடந்த தொப்புள்கொடி உறவைத் திராவிட இயக்கத்திற்கும், முஸ்லிம் சமுதாயத்திற்குமிடையே பேணி வளர்த்த நட்பிற்கு இலக்கணம் வகுத்த கலைஞர் ஆவார். தேர்தலில் தோல்வியே அடையாத கலைஞர் கண்ணியமிகு காயிதே மில்லத்துடன் நெருங்கிப் பழகி தேசம் வளர்த்தவர். அவரது வரலாறு ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கியெழ உணர்வூட்டுவதாகும். எதிர்காலத்திலும் அந்த உறவு மென்மேலும் வலுப்பெறும், மண்ணில் மறைந்தாலும் மனதில் கலையாமல் நிலைத்திருப்பவை கலைஞர் குறித்த நினைவுகளும், அவர் ஊட்டி வளர்த்த உணர்வுகளும் ஆகும்.


திராவிட இயக்கத்தின் பிரகாசிக்கும் சூரியனாக வாழ்ந்த கலைஞர் அவர்கள் மறைந்தாலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்தில் இன்னும் பன்னெடுங்காலம் பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை. கலைஞரின் லட்சியங்களை நிறைவேற்றும் திசையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்கும். அதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் ஒத்துழைத்து ஓரணியில் நிற்கவேண்டும்.


கலைஞரின் மரணம் ஒவ்வொரு தமிழருக்கும் சமூக நீதி போராளிகளுக்கும் தனிப்பட்ட இழப்பாகும். அவரை இழந்து வாடும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் கலைஞரின் குடும்பத்தினருக்கும், தி.மு.க. குடும்பத்தினருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


சமீபத்தில் எனது இரு கால்களில் செய்யப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை காரணமாக கலைஞர் அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துக்கொள்ள இயலாததை எண்ணி வருந்துகின்றேன்.


கலைஞர் அவர்களின் மறைவையொட்டி மனிதநேய மக்கள் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.